புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கெனவே மத்திய பிரதேசம் மற்றும் தென்மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநில பாஜக எம்.பி.க்களுடன் டெல்லியில் நேற்று காலை பிரதமர் மோடி சிற்றுண்டி அருந்தினார். அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகளை நடத்துமாறும் மோடி ஆலோசனை வழங்கியதாகவும் விளையாட்டுக்கள் இளைஞர் களிடம் நேர்மறையான உந்துதலை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் கருதுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
உபி.யில் பாஜகவுக்கு உள்ள எம்.பி.க்களில் 36 எம்.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கரோனா விதிகள் காரணமாக எம்.பி.க்கள் கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும் விரைவில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பற்றிஆலோசிக்கவில்லை என்றும் அவர் கள் கூறினர். உ.பி.யில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.