இந்தியா

ஊழலற்ற ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி: உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய வர்த்தக தொழில் சபை கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) ஆண்டு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஊழல் அற்ற ஆட்சி நடத்துகிறார். நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் 60 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு, மின்இணைப்பு, சமையல் காஸ் இணைப்பு, சுகாதார வசதிகள் இல்லாமல் இருந்தன. 60 கோடி மக்களின் வாழ்க்கையில் மத்திய அரசு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியின் சீரிய தலைமையில் கரோனாவுக்கு எதிரான போரை இந்தியா திறம்பட நடத்தி வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலால் 130 கோடி மக்களும் கரோனாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேறு எந்தவொரு நாடும் இத்தகைய சாதனையை படைக்கவில்லை. பல மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT