பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்த போது சொகுசு வசதிகள் பெறுவதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஊழல் தடுப்புத் துறை தாமதம் செய்துவருவதால் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு சமூக ஆர்வலர் கீதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. 2 வாரத்துக்குள் அனுமதி பெற்று முழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம்” என தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.