இந்தியா

80% பெண்கள் 5 மணி நேரம், 20% ஆண்கள் 1.5 மணி நேரம்: இந்தியாவில் வீட்டு வேலைகளில் பாலின சமத்துவ நிலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி நாட்டில் 80% பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 5 மணிநேரம் ஊதியமில்லாத வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதேபோல் சுமார் 20% ஆண்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் இப்பணிகளின் ஈடுபடுகின்றனர் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் கூறியதாவது:

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்ட நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பின்படி (ஜனவரி - டிசம்பர் 2019), கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா இரண்டிலும், சுமார் 80% பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 5 மணிநேரம் ஊதியமில்லாத வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20% ஆண்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் இப்பணிகளின் ஈடுபட்டுள்ளனர்.

ஆண் மற்றும் பெண் இருவரின் பங்களிப்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் சமூக மனப்பான்மை மற்றும் சமூக நடைமுறைகளை மாற்றுவதை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசியக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இத்தகைய செயல்முறைகளில் அவர்களின் பங்கேற்பை முறைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் பெண்களின் நலனை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை இக்கொள்கை வழங்குகிறது.

முறையான மற்றும் முறைசாரா துறைகளில் (வீட்டுப்பணி தொழிலாளர்கள் உட்பட) பெண்களை உற்பத்தியாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் அங்கீகரிப்பதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான பொருத்தமான கொள்கைகள் அதற்கேற்ப வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT