ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம் மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை சிவன் கோயில் முன் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
பஞ்ச பூத தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று முன் தினம் பக்த கண்ணப்பர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று சிவன் கோயில் முன் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. ஒரு பிரம்மோற்சவத்திற்கு 2 முறை கொடி ஏற்றுவது இக்கோயிலில் வழக்கம்.
மாலை கோயில் வளாகத்தில் நடனம் மற்றும் இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மின் விளக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.