அகிலேஷ் யாதவுடன் அவரது சித்தப்பா சிவபால் யாதவ். 
இந்தியா

அகிலேஷ் சித்தப்பா சிவபால் யாதவ் மீண்டும் கூட்டணியில் இணைந்தார்: முடிவுக்கு வந்த 5 ஆண்டு மோதல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் அவரது சித்தப்பா சிவபால்சிங் யாதவ் மீண்டும் கூட்டணி அமைத்து இணைந்துள்ளார். இருவரது ஐந்து வருட மோதல் கூட்டணி அமைத்து முடிவிற்கு வந்துள்ளது.

உ.பி.யில் கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்து, சமாஜ்வாதியின் முதல்வராக இருந்தவர் அகிலேஷ் சிங். முலாயம் சிங்கின் மகனான இவருக்கும் சித்தப்பாவான சிவபால் யாதவிற்கும் இடையே உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கருத்து வேறுபாடுகள் கிளம்பின.

சிவபாலுக்கு ஆதரவாக அவரது மூத்த சகோதரரும் சமாஜ்வாதியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் இருந்தார். இதனால், கட்சியில் பிளவு ஏற்பட்டு அதன் தலைவரான அகிலேஷுக்கும், சிவபாலுக்கும் இடையே மோதல் தொடங்யது. இதில், சமாஜ்வாதி கட்சி தமக்கே சொந்தம் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இதன் தீர்ப்பில், சமாஜ்வாதி அகிலேஷுக்குச் சொந்தம் எனவும், அதன் தேர்தல் சின்னமான சைக்கிளும் அவருக்கே கிடைத்தன.

பிறகு வேறுவழியின்றி சற்று சமாதானம் அடைந்த சிவபால், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுடன் இணைந்திருந்தார். இருப்பினும், தன் சித்தப்பாவான சிவபாலுக்கு முன்பு போல் கட்சியில் அகிலேஷ் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதன் காரணமாக மீண்டும் சிவபாலின் அதிருப்தி தொடர்ந்தது. இதன் முடிவாக கடந்த ஆகஸ்ட் 2018இல் சிவபால் புதிய கட்சி தொடங்கி, மதச்சார்பற்ற முன்னணி எனும் பெயரில் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்தார். இதற்காக, அவர் 'பிரகதீஷல் சமாஜ்வாதி கட்சி லோகியா (பிஎஸ்பிஎல்)' எனப் புதிதாகத் தொடங்கி நடத்தி வந்தார். அவரது பிரிவின் தாக்கம் கடந்த தேர்தலில் ஏற்பட்டது.

இது வரவிருக்கும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஏற்படாமலிருக்க இருவரிடையே நேற்று இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. லக்னோவில் அகிலேஷின் அரசுக் குடியிருப்பில் சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சின்போது முலாயம் சிங்கும் இருந்தார். இதை அகிலேஷும் தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். அதில் அவர், ''வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற உ.பி.யின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறது சமாஜ்வாதி. இந்தவகையில் பிஎஸ்பிஎல் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களும் அகிலேஷின் வீட்டின் முன் கூடி நின்றனர். 'சாச்சா, பதீச்சா ஜிந்தாபாத்!' எனவும் அவர்கள் கோஷமிட்டு இணைப்பிற்கான தம் ஆதரவை வெளியிட்டனர். ஆதரவாளர்கள் கூட்டணி உருவாகியுள்ளது. இதில், தம் கட்சியைக் கலைத்து சமாஜ்வாதியுடன் மீண்டும் இணைய சிவபால் மறுத்துவிட்டார். சமாஜ்வாதியில் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த மோதல், உ.பி.யின் 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் முலாயம் தன் மகன் அகிலேஷை முதல்வராக்கியது முதல் தொடங்கியது. 2016இல் இந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்தபோது உ.பி.யின் கேபினட் அமைச்சராக இருந்த சிவபாலையும் பதவி நீக்கம் செய்து அகிலேஷ் நடவடிக்கை எடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT