புதுடெல்லி: காதலுக்கு வயது எப்போதுமே ஒரு தடையில்லை. காதலைக் கண்டுபிடிப்பதற்கும், புதிய துணையைத் தேடுவதற்கும் மனதர்கள்தான் தடையாக இருப்பார்களே தவிர மனது தடையாக இருந்ததில்லை.
அதிலும் ஒரு பெண்ணுக்குத் திருமணம், புதிய வாழ்க்கையைத் தொடங்குவது என்பது வாழ்வில் உன்னதமான தருணம். அதிலும் வாழ்க்கையைப் பாதியில் தொலைத்தவருக்கு மீண்டும் இனிமையான சூழலில், மனதுக்குப் பிடித்த வாழ்க்கை அமைதல் என்பது மறுபிறவி போன்றது.
அதிலும் தாயின் திருமணத்தைக் குழந்தைகள் புடைசூழ வாழ்த்துவது புரிதலின் உச்சம் என்றுதான் சொல்ல முடியும். நாகரிகமான வாழ்க்கையை இந்தியர்கள் வாழத் தொடங்கினாலும், தாய்க்கு மகள், மகன் திருமணம் நடத்தி வைப்பது என்பது சமூகத்தில் விரும்பத்தகாத நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது
ஆனால், தனது தாய் 15 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த வாழ்க்கையை மீண்டும் தேடிக்கொண்டபோது, அவரை மகளும், மகனும் வாழ்த்தியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்களும் இணைந்து வாழ்த்தியுள்ளனர்.
தன்னுடைய தாயின் திருமண வைபவத்தின் ஒவ்வொரு சடங்கையும் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளம் மகிழ்ந்ததை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
அந்தப் பெண் ட்விட்டரில், “என்னுடைய தாயின் திருமணம், அமைதியாக இருக்க முடியாது” எனப் பதிவிட்டதற்கு பாராட்டுகளும் புதிய தம்பதிக்கு வாழ்த்துகளும் குவிந்தன.
அந்தப் பெண் தன்னுடைய தாயின் திருமணப் புகைப்படங்களையும், மெகந்தி வைக்கும் படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து, “என்னுடைய தாய் திருமணம் செய்யப் போகிறார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், புதிய வாழ்க்கைக்குத் தனது தாய் எவ்வாறு வெட்கத்துடன் தயாராகிறார் என்பதையும் சிறிய வீடியோவாக அந்தப் பெண் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன் ஒருவர் தாயின் திருமணம் குறித்துக் கேட்ட கேள்விக்கு அந்தப் பெண் அளித்த பதிலில், “நச்சுத் திருமணத்திலிருந்து என் தாய் 15 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிவிட்டார். உண்மை என்னவென்றால் நானும், எனது 16 வயது சகோதரரும் குடும்பத்தில் ஆண் இல்லாமலே வளர்ந்துவிட்டோம். ஆனால், இப்போது, எங்கள் வாழ்க்கையில் தந்தை என்ற உருவத்தில் ஒருவர் வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கக் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதன்பின் அந்தப் பெண் தன்னுடைய தாய் குறித்த புகைப்படங்கள், மகிழ்ச்சியான தருணங்களை விவரிக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டது நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்தது.
அந்தப் பெண் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மோதிரம் மாற்றும் நிகழ்ச்சி இனிதாக நடந்தது. என் மனதுக்குள் ரகசியமாக அழுதுகொண்டேன். நான் என்ன சொல்கிறேன் என்றால், என் புதிய தந்தையுடன் என் தாய் அழகாக இருந்தார். எனக்கு இப்படி ஒருதாய் கிடைத்தது அதிர்ஷ்டம். என் தாயின் திருமணத்தைப் பார்த்த நான்தான் மகிழ்ச்சியான குழந்தை. உண்மையில் கண்ணீர் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் தாயின் திருமணப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துகளை வாரி வழங்கியுள்ளனர்.