புதுடெல்லி: பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 என உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது, அகில இந்திய முஸ்லிம் லீக் தனிச்சட்ட வாரியத்தில் தலையிடும் செயல் எனக் கூறி, அவசரமாக விவாதிக்க வேண்டி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருமண வயதாக ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 எனத் தற்போது உள்ளது. இதில் பெண்களின் திருமண வயதையும் ஆண்களைப் போல் 21 வயது என உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில், ஊட்டச்சத்திலிருந்து பெண்களைக் காக்க அவர்களுக்குச் சரியான வயதில் திருமணம் நடைபெறுவது அவசியம் என்ற கருத்து நிலவி வந்தது. இதற்கான மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டுவர நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இதை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து அமலாக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மக்களவையில் பெண்களின் திருமண வயது விவகாரத்தைப் பற்றி விவாதிக்க, கவன ஈர்ப்புத் தீர்மானம் கோரி முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸில் முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் கூறும்போது, ‘‘பெண்களின் திருமண வயது உயர்வால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டும். இது அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தில் மத்திய அரசு தலையிடும் செயல் ஆகும். இதுபோன்ற நடவடிக்கையில் மத்திய அரசு தவிர்ப்பது அவசியம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை அளிக்கப்பட்ட இந்த நோட்டீஸை மக்களவையின் முஸ்லிம் லீக் கட்சியின் அவைத் தலைவர் ஈ.டி.முகம்மது பஷீர், டாக்டர்.எம்.அப்துஸ்சமது சம்தானி மற்றும் கே.நவாஸ்கனி ஆகியோர் அளித்துள்ளனர்.
மாநிலங்களவையிலும் பெண்கள் திருமண வயதை அவசரமாக விவாதிக்க முஸ்லிம் லீக் நோட்டீஸ் அளித்துள்ளது. அங்கு இதைக் கட்சியின் ஒரே ஒரு எம்.பியான வி.அப்துல் வஹாப் அளித்துள்ளார்.-