புதுடெல்லி : 2025-ம் ஆண்டுக்குள் ‘காசநோய் இல்லா இந்தியா’ பிரச்சாரத்தில் மக்களை 'முக்கிய பங்காளிகளாக' உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''எல்லா நோய்களையும் விட, காசநோயை முற்றிலுமாக அகற்ற சமூகத்தின் ஈடுபாடு இன்றியமையாதது. காசநோயின் தாக்கம் சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் மீது அதிக அளவில் உணரப்படுகிறது. காசநோயை ஒழிக்க வளங்களைப் பெருமளவில் திரட்டவும் பல துறைகளின் தலையீடுகளும் தேவை.
மக்கள் இயக்கமாக உருவெடுத்தால் மட்டுமே காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை அடைய முடியும். இந்த இயக்கத்தில் மக்களை ஈடுபடுத்த அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற ‘டீம் இந்தியா’ உணர்வை ஏற்றுப் பல்முனை முயற்சிகள் தேவை'' என்றார்.
காசநோய்க்கு எதிராக பெண்கள் வெற்றி பெறுவதற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், காசநோய் தொடர்பாக இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது மாநாடு இது என்பதால் காசநோய் ஒழிப்பில் அரசின் உறுதி தெளிவாகத் தெரிகிறது என்றார்.
இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, பிற மக்கள் பிரதிநிதிகள், காசநோய் ஒழிப்புக்காக பாடுபடும் அமைப்புகள், காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
காசநோயிலிருந்து மீண்ட பெண்களைக் குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார். காசநோயை எதிர்த்துப் போராட பாலின-உணர்திறன் அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்த அவர், பெண்களுக்குச் சிறந்த ஆலோசனை, ஊட்டச்சத்து மற்றும் வீடு தேடி பரிசோதனை ஆகியவற்றைப் பரிந்துரைத்தார்.
‘காசநோய் தடுக்கக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்’ என்று அவர் கேட்டுக்கொண்டார். காசநோய் பற்றிய களங்கத்தை அகற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளை உள்ளூர் மட்டத்தில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரையாடல்களில் பங்கேற்கவும் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்தார்.