கோப்புப்படம் 
இந்தியா

கச்சா எண்ணெய் கடும் சரிவு: பெட்ரோல், டீசல் விலையை 54 நாட்களாகக் குறைக்காத அரசு நிறுவனங்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி : சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை சரிந்துவிட்ட நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதன்பலனை நுகர்வோருக்கு வழங்காமல், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உள்ளன.

கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் இருக்கிறது. இதனால் பெட்ரோல் அடிப்படை விலை லி்ட்டர் ரூ.47.93 ஆகவும், டீசல் அடிப்படை விலை லிட்டர் ரூ.49.33 ஆகவும் இருக்கிறது.

கடந்த நவம்பர் 9ம் தேதி பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை பேரல் 84.78 டாலராக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால், விலை சரிந்து, பேரல் 70 டாலராகக் குறைந்தது.

கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலராகக் குறைந்தபோதிலும் பெட்ரோல், டீசல் மீதான அடிப்படை விலையை கடந்த மாதம் 4ம் தேதியிலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றியமைக்காமல் இருக்கின்றன.மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான உற்பத்தி வரியைக் குறைத்த மறுநாளில் இருந்து விலையில் எந்த மாற்றமும் இதுவரை இல்லை.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சராசரி செலவு கடந்த நவம்பர் 10ம் தேதி பேரல் ஒன்றுக்கு ரூ.6,234.94 ஆக இருந்தது. இது 12 சதவீதம் சரிந்து டிசம்பர் 15ம் தேதி ரூ.5.490 ஆகக் குறைந்துவிட்டது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த மாதம் நவம்பர் 4ம்தேதி முதல் மாற்றி அமைக்காமல் இருக்கின்றன.

ஆனால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதிலில் பெட்ரோல், டீசல் விலை வெளிப்படைத்தன்மையுடன் நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது.

பெட்ரோலியத்துறை இணைஅமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறுகையில் “ கடந்த 2017ம் ஆண்டு ஜூன்16ம் தேதி முதல் நாடுமுழுவதும் சர்வதேசசந்தையில் விலை நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. நாள்தோறும் விலையை மாற்றியமைக்கும் முறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது. இதனால் நுகர்வோருக்குத்தான் நன்மை” எனத் தெரிவித்தார்

பெட்ரோலியத்துறைஅமைச்சர் ஹர்திக் சிங் பூரி மாநிலங்களவையில் அளித்த பதிலில் “ பெட்ரோல், டீசல் விலை பொதுத்துறை நிறுவனங்கள் எடுக்கும் முடிவு, அந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்ப, பரிவரத்தனைக்கட்டணம், வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை வைத்து சரியானவிலையை நிர்ணயிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்

ஆனால் கடந்த நவம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை பேரல் 84 டாலராக இருந்த நிலையில் தர்போது பேரல் 72 டாலராகக் குறைந்துவிட்ட நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் அதன் பலனை மக்களுக்கு வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன் எனத் தெரியவில்லை.

ஒரு விலையை மாற்றி அமைக்கும்முன், அதற்கு முந்தைய 2 வாரங்களில் விலை நிலவரத்தின் அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்கின்றன. அந்தவகையில் விலை தொடர்ந்து சரிந்துவரும் நிலையிலும் அதன்பலன் மக்களுக்குக் கிடைக்காதது ஏனோ?

SCROLL FOR NEXT