இந்தியா

விவசாயிகள் வீடு திரும்பினர்: டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து தொடங்கியது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து நாடாளுமன்றத்திலும் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கடந்த வாரத்தில் இருந்து டெல்லியில் வடக்கு உத்தர பிரதேசத்தின் எல்லைப் பகுதியான காஜிப்பூர், ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்கு பார்டர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் நேற்று காலி செய்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

காஜிப்பூரில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்படுவதற்கு முன் அப்பகுதியில் விவசாயிகள் வெற்றிப் பேரணி நடத்தினர். விவசாயிகள் காலி செய்ததைத் தொடர்ந்து 383 நாட்களுக்குப் பிறகு சிங்கு பார்டர் பகுதியில் நேற்று போக்குவரத்து எந்த இடையூறும் இன்றி பழையபடி சீரானதாக போலீஸார் தெரிவித்தனர்.

டெல்லியில் இருந்து அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப் பட்டதாகவும் எல்லைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதாகவும் தற்போது போக்குவரத்து சீரானது என்றும் டெல்லி வடக்கு புறநகர் துணை போலீஸ் கமிஷனர் பிரிஜேந்திர யாதவ் தெரிவித்தார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT