புதுடெல்லி: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியதில் தமிழக அரசுதான் முதலிடம் வகிக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், குஜராத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் மாநில அரசின் இலவச ரேஷன் பொருட்களை வாங்க விரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கிட வேண்டும்.
அவர்களிடம் ரேஷன் கார்டு, அடையாள அட்டை கேட்கக்கூடாது. இது தொடர்பான பயனாளிகள் பற்றிய அறிக்கையை மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்தப் பணிகளை கவனிக்க நீதிமன்றம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிஜுஸ் காந்தி ராய் நியமிக்கப்பட்டுள்ளார்” என உத்தரவிட்டது.
22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து அறிக்கையைப் பெற்று பிஜுஸ் காந்தி ராய் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 400 பேர் பாலியல் தொழிலாளர்களாகப் பதிவு செய்துள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 85 ஆயிரத்து 504 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 73,381 பேரிடம் ரேஷன் கார்டு இருக்கிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ரேஷன் பொருட்களைக் கூட்டுறவு சந்தைகள், கூட்டுறவு சூப்பர் மார்க்கெட், அம்மா மினி கூட்டுறவு, நடமாடும் பசுமை காய்கறிகள் திட்டம் ஆகியவை மூலம் அனைத்துப் பாலியல் தொழிலாளர்களுக்கும் இலவசமாகப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது
மத்தியப் பிரதேசத்தில் 40,312 பாலியல் தொழிலாளர்களும், உ.பியில் 28,076 பாலியல் தொழிலாளர்களும், மகாராஷ்டிராவில் 25,594 பேரும், குஜராத்தில் 24,579 பேரும், கேரளாவில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் உள்ளனர்.
குஜராத் அரசு தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலத்தில் 15,408 பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லாவிட்டாலும் அன்னம் பிரம்மா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதில் 12,291 பேர் இதை வாங்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தல் 40,312 பாலியல் தொழிலாளர்களில் 3,657 பாலியல் தொழிலாளர்கள்தான் இந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதிவரை இலவச ரேஷன் பொருட்களைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர அரசின் அறிக்கையில் 25,594 பாலியல் தொழிலாளர்கள் தவிர்த்து அவர்களைச் சார்ந்திருக்கும் 6,731 குழந்தைகளுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. கரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகையும், குழந்தைகளுக்குரூ.2,500 உதவித்தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
உ.பி. மற்றும் திரிபுராவில் மட்டும்தான் ஆண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். மேகாலயா, உ.பி.யில் மூன்றாம் பாலினத்தவர், பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் 28,076 பதிவுசெய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்களில் 7,237 பேர் ஆண்கள். இவர்களில் 25,322 பாலியல் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன, 1,752 பேர் பொருட்கள் வாங்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் 3,552 பெண், 281 ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு 19 ஆயிரம் கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேகாலயாவில் 200க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் ரேஷன் கார்டு வைத்துள்ளனனர். 7 மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சேர்த்து இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக அசாமில் 11,530 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க 19 மாவட்டங்களுக்கு ரூ.32.87 லட்சம் ஒதுக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.