சித்தராமையாவின் ஆடம்பர கைக்கடிகார விவகாரத்தில் மஜத, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோரி போர்க்கொடி தூக்கியிருப்பதால், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் ஆடம்பர கைக்கடிகாரம் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக மஜத, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் கர்நாடக சட்டப்பேரவையை முடக்கியுள்ளன. சர்ச்சைக்கு வித்திட்ட அந்த கடிகாரத்தை முதல்வர் சித்தராமையா அண்மை யில் அரசிடம் ஒப்படைத்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சி களான மஜத, பாஜக ஆகியவை தொடர்ந்து சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்டன. சட்டப் பேரவை தலைவர் காகோடு திம்மப்பாவும், முதல்வர் சித்தரா மையாவும் பல முறை எதிர்க் கட்சிகளை சமாதானப்படுத்த முயன்றும் எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம், ஆடம்பர கைக்கடிகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, எஸ்.எம்.கிருஷ்ணா, ஜாஃபர் ஷெரீப் போன்றோர் கடிகார விவகாரத்தில் சித்தரா மையா கட்சியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கட்சி மேலிடத்திடம் புகார் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூரு வில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '' சித்தராமையா அதிகாரத்தை பயன்படுத்தி பொய் யான ஆதாரங்களை உருவாக்கி வருகிறார். எனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்''என்றார்.
பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன.
சித்தராமையாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மத்தியிலும் சொந்தக்கட்சியிலும் நெருக்கடி அதிகரித்துள்ளதால், அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற் பட்டுள்ளதாக கர்நாடக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.