ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேச கட்சியின் உறுப்பினர்களை நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா தரக்குறைவாக பேசியதாக ஓராண்டு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ரோஜா ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பேரவைத்தலைவரின் உத்தரவை மீற முடியாது என உயர் நீதிமன்றம் ரோஜாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து ரோஜா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், உடனடியாக ரோஜாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி உயர் நீதிமன்றத்துக்கு உத்தவிட்டது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் உயர் நீதிமன்றம் பேரவை தலைவரின் சஸ்பெண்ட் மீது இடைக்கால தடை விதித்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட உறுப்பினர்கள் அனைவரும் பேரவைக்குள் செல்ல முயன்றனர். அப்போது, மெய்காப்பாளர்கள் ரோஜாவை பேரவை தலைவர் உத்தரவின்றி உள்ளே அனுமதிக்க முடியாது என திட்ட வட்டமாக கூறி விட்டனர். இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். உயர் நீதி மன்றத்தின் உத்தரவை மதிக்க மாட்டீர்களா? என அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரவை முன் உள்ள காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் செய்தனர்.
இது குறித்து நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு கூறும் போது: ‘‘யார் மீதும் தனிப்பட்ட முறையில் விருப்போ, வெறுப்போ இல்லை. பேரவை தலைவர் முன்னிலையில் அவை சம்மதத் தோடு ரோஜா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார். அதேபோன்று, அவையில் விவாதித்த பின்னர் ரோஜா குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார். இதனிடையே ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ராஜ்பவன் சென்று ஆளுநரின் செயலாளரிடம் இது குறித்து புகார் மனு அளித்தனர். ஆந்திர அரசும் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய விண்ணப்பித்துள்ளது.