பெங்களூரு: நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயமடைந்து பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் இன்ற காலை காலமானதாக விமானப் படை அறிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் தேதி நீலகிரி மாவட்ட குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள விமானப் படை கமாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சையின் போது, வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும் என்ற நம்பிக்கையோடு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
சில சமயம் சற்று முன்னேற்றம் ஏற்பட்டபோதும் அவருக்கு பாதிப்பு அதிகமாகவே இருந்தது. தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெறவேண்டி ஹைபா்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் வருண் சிங்குக்கு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானதாக விமானப் படை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் இன்று காலை காலமானார். இதனை ஆழ்ந்த வருத்தத்துடன் விமானப்படை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.