படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

லக்கிம்பூர் கலவர வழக்கை மக்களவையில் விவாதிக்க ராகுல் காந்தி ஒத்திவைப்பு நோட்டீஸ்

ஏஎன்ஐ

புதுடெல்லி: லக்கிம்பூர் கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அளித்த அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி. அது கவனக்குறைவால், அசட்டையால் நடந்தது அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் முயன்றனர். ஆனால், மக்களவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி, “லக்கிம்பூர் கலவர விவகாரத்தை எழுப்பினோம். ஆனால், விவாதிக்க அனுமதியில்லை. பிரச்சினையை விவாதிக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்தோம். இந்த விவகாரத்தை நிச்சயம் நாடாளுமன்றத்தில் நாளை எழுப்புவோம், ஆனால், அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மக்களவையில் லக்கிம்பூர் கலவர விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை விவாதிக்க வேண்டும் எனக் கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அதில், “மக்களவையில் இன்று அலுவல்களை ஒத்திவைத்து, லக்கிம்பூர் கலவரத்தில் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும். இது அவசர முக்கியத்துவம் வாய்ந்தது.

லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகளைக் கொலை செய்தது முன்பே திட்டமிடப்பட்ட சதி என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அது அலட்சியமான செயலோ அல்லது கவனக்குறைவால் நடந்ததோ அல்ல என்றும் தெரிவித்த சிறப்பு விசாரணைக் குழு ஐபிசி பிரிவில் பல்வேறு பிரிவுகளை மாற்றக் கோரியுள்ளது.

இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நீதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT