டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டியளித்த காட்சி 
இந்தியா

லக்கம்பூர் கெரி கலவரம்; பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: லக்கிம்பூர் கெரி கலவரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும். அவரின் அமைச்சரவையில் இருக்கும் அஜய் மிஸ்ராவை உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்டசதி. அது கவனக்குறைவால், அசட்டையால் நடந்தது அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் மோடியின் மனநிலை, விவசாயிகளுக்கு எதிரான மனநிலையாக இருக்கிறது. உடனடியாக அமைச்சர் அஜஸ் மிஸ்ராவின் பங்கு என்ன என்பதைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

நீதிமன்றத்தின் கண்டனம், சத்யாகிரகப் போராட்டம் காரணமாகவும் நடந்த விசாரணையில் அமைச்சரின் மகன் திட்டமிட்டு சதி செய்து விவசாயிகளைக் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் மோடி, உடனடியாக அஜஸ் மிஸ்ராவை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்ட வேண்டிய நேரம். முதலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். உண்மை உங்கள் முன் இருக்கிறது’’ எனத் தெரிவித்து, லக்கிம்பூர், மர்டர் என்ற ஹேஷ்டேகுகளைப் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “ஒரு அமைச்சர் விவசாயிகளைக் கொலை செய்ய முயன்றார். அவர் தன்னுடைய அமைச்சரவையைச் சேர்ந்தவர் என்பது பிரதமருக்கும் தெரியும். இந்த விவகாரத்தை எழுப்பினோம், ஆனால், விவாதிக்க அனுமதியில்லை. பிரச்சினையை விவாதிக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்தோம்.

இந்த விவகாரத்தை நிச்சயம் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம், ஆனால், அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். விவசாயிகள் மீது ஜீப் ஏற்றப்பட்டால், எந்த சக்தி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பின்னால் இருந்தது. யார் சுதந்திரம் அளித்தது, எந்த சக்தி அவர்களைச் சிறையில் இருந்து வெளியேற்றியது” எனக் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “அன்பு மோடிஜி, லக்கிம்பூர் கெரி கலவரத்தில் விவசாயிகளைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் நீங்கள் விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும், அமைச்சர் ஆஷிஸ் மிஸ்ராவை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT