லக்கம்பூர் கெரி: உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஐபிசி 307 (கொலை முயற்சி), பிரிவு 326 (ஆபத்தான ஆயுதங்கள் மூலம் காயங்களை வேண்டுமென்றே ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளைச் சேர்க்க நீதிபதி சிந்தா ராம் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்திப் போராடினர்.
அப்போது விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாகவும், நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. உ.பி. அரசும் சிறப்பு விசாரணைக் குழு அமைத்திருந்தது.
இதில் விவசாயிகள், பத்திரிகையாளர் என 5 பேர் கொல்லப்பட்டநிலையில் பாஜகவினர் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு விசாரணைக் குழுவின் அதிகாரி எஸ்பி யாதவ், தனது விசாரணையை முடித்து நேற்று மாஜிஸ்திரேட் சிந்தா ராமிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறுகையில், “லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகள் 4 பேர், பத்திரிகையாளர் ஒருவர் என 5 பேர் கொல்லப்பட்டது என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி.
கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள், பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது கவனக்குறைவான செயலோ அல்லது அலட்சியத்தாலோ ஏற்படவில்லை’’ எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஐபிசி 279 (வேகமாக வாகனத்தை ஓட்டுதல்), பிரிவு 338 (காயத்தை ஏற்படுத்துதல்), பிரிவு 304ஏ (உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக நடத்தல்) ஆகியவற்றை நீக்கி 307 (கொலை முயற்சி) பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழு கேட்டுக்கொண்டது.
அதேசமயம், ஐபிசி 326, 34, 3/25/30 ஆகிய பிரிவுகளை நீக்கலாம் என மாஜிஸ்திரேட்டிடம் சிறப்பு விசாரணைக் குழு கேட்டுக்கொண்டது. மேலும், ஐபிசி பிரிவு 302 (கொலை) பிரிவு147 (கலவரம்), பிரிவு148 (கலவரம் செய்தல், ஆயுதங்களுடன் கூடுதல்) பிரிவு 149 (சட்டவிரோதமாகக் கூடுதல்), 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது
சிறப்பு விசாரணைக் குழுவின் வாதங்களைக் கேட்ட நீதிபதி சிந்தா ராம், “ஐபிசி பிரிவுகள் 279, 338, 304ஏ ஆகியவற்றைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீக்க உத்தரவிட்டார்.
ஆனால், ஐபிசி பிரிவு 34 நீக்க உத்தரவிட்டதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பதில் அளித்த நீதிபதி ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 149 பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.