இந்தியா

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தால் மதம் மாறியவர்கள் அரசு சலுகைகள் இடஒதுக்கீடு உரிமையை இழக்க நேரிடும்: உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டம் அமலுக்கு வந்தால், மதம் மாறுபவர்கள் அரசின் சலுகைகள், இடஒதுக்கீடு உரிமையை இழக்க நேரிடும் என அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெலகாவியில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளார். இதற்கு கிறிஸ்தவ அமைப்பினரும் காங்கிரஸாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சட்டம் பற்றி மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமி கூறும்போது, "மதமாற்ற தடை சட்டத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டப் பிரிவுகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மதம் மாறியவர்களின் சாதிச் சான்றிதழை மாற்றியமைக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தியுள்ளனர். அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு புதிய மதத்தின் பெயரை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ம‌தமாற்ற தடை சட்டத்தின் பல பிரிவுகள் இதில் சேர்க்கப் பட்டுள்ளன''என்றார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறும்போது, "யாராவது மதம் மாறினால் அவர்களுக்கு இந்து மதத்தில் அளிக்கப்பட்ட பலன்கள் மீண்டும் அளிக்கப்படாது. உ.பி.யில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மதம் மாறிய பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்தால்,பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மதம் மாறினால் அரசின் சலுகை, இடஒதுக்கீடு உரிமையை இழக்க நேரிடும். அரசின் நலத்திட்டங்களில் மதம் மாறியவர்களுக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது''என்றார்.

இதனிடையே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, "மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறிவிடாது. அதனால் அரசின் சலுகைகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT