லக்னோ: பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கடைசி காலத்தை கழிக்க ஏற்றம் இடம் காசி தான் என கிண்டல் செய்துள்ளார். இதற்கு பாஜகவினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து 2-வது நாளாக வாரணாசியில் தங்கியுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
‘‘பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் காசியில் ஒரு மாதம் மட்டும் அல்ல இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கலாம். அவர்கள் தங்க ஏற்ற இடம் அது தான்.
பொதுவாக இந்துக்கள் தங்களது கடைசி காலத்தை காசியில் கழிக்கவே விரும்புவர். பிரதமர் மோடி உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம், ஆனால் கடவுளிடம் கூற இயலாது’’ இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக நிர்வாகிகள் பலருமு் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உ.பி. பாஜக தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் இதுபற்றி கூறுகையில் ‘‘தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியை அருவருப்பாகவும், மோசமாகவும் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவருக்கு புத்தி சொல்ல கடவுளை பிரார்த்திக்கிறேன். இந்த பாவங்களை போக்கிக் கொள்ளவும், மன்னிப்பு பெறவும் அகிலேஷ் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.