தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல் 

ஏஎன்ஐ

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழப்பைத் தவிர்க்க பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை இந்தியா தொடங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீகரின் புறநகர்ப் பகுதியான ஜேவானில் உள்ள போலீஸார் முகாம் அருகே போலீஸார் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸார் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த போலீஸார், துணை ராணுவப் படையினர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் நேற்று நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“2 போலீஸார் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது வேதனைக்குரியது. அவர்களின் குடும்பத்தாருக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்தத் தாக்குதல்கள், மோதல்கள் அனைத்தும் முடிவுக்கு வர வேண்டுமென்றால், இதயங்களை வெல்வதற்குப் பணியாற்ற வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

டெல்லிக்கும் காஷ்மீருக்கும் இடையிலான இடைவெளி குறைந்திருக்கிறது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் முன்னேறியிருக்கிறது. சீன ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலிலும் சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால், ஏன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது, ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வார்த்தையின்படி, நண்பர்கள் மாறலாம், அண்டைவீட்டார் மாறக்கூடாது என்றார். கடைசி குண்டு பாயும் வரை நாம் காத்திருக்க முடியாது. இரு தேசங்களும் முன்வந்து மீண்டும் பேச வேண்டும். இந்தியா, பாகிஸ்தானுக்கும் இது நல்லது, இரு தரப்பிலும் உயிர் சேதங்களைத் தவிர்க்கும்''.

இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT