சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென அவரது கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.பி. ரகுராம கிருஷ்ணம்மராஜூ ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடினர். இதில், எம்.பி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு தொடர்பாக 11 குற்றப்பத்திரிகைகள் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும். எனவே, அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரினார்.
ஜாமீனை ரத்து செய்ய எம்.பி. ரகுராம கிருஷ்ணம்மராஜூ சிபிஐ நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்தார். அதனை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கு மேலும் 2 வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.