மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் | கோப்புப்படம் 
இந்தியா

பொதுத்துறை வங்கிகளில் 41 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: நிர்மலா சீதாராமன் தகவல்

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளில் டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி 41 ஆயிரத்து 177 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், அவர்களால் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்பது அரசுக்குத் தெரியுமா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துப் பேசியதாவது:

''டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்கள் அளவில் 95 சதவீத ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 5 சதவீதம் மட்டுமே அதாவது சிறிய அளவிலான காலியிடங்களே நிரப்பப்படாமல் உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 986 பணியிடங்கள் உள்ளன. இதில் ஸ்டேட் வங்கியில் மட்டும் அதிகபட்சமாக 8,544 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒட்டுமொத்தமாக 41 ஆயிரத்து 177 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதிகாரிகள், கிளார்க், துணை ஊழியர்கள் ஆகிய 3 பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

ஸ்டேட் வங்கியில் 8,544 காலியிடங்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,743 காலியிடங்கள், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 6,295 காலியிடங்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5,112 காலியிடங்கள் உள்ளன.

பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,848 காலியிடங்கள் உள்ளன. எஸ்பிஐ வங்கியில் 3,424 இடங்கள் அதிகாரிகள் மட்டத்தில் காலியாக உள்ளன. 5,121 இடங்கள் கிளார்க் அளவில் காலியாக இருக்கின்றன. வங்கிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது இடங்களை நிரப்பி வருகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து எந்தவிதமான பதவியிடங்களையும் மத்திய அரசு நீக்கவில்லை''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT