வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத் திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், அந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது சமாஜ்வாதி அரசுதான், அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்தை ரூ.339 கோடியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டத்துக்காக 300 சிறு கடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்கார்ரகளிடம் சுமுகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காசி விஸ்வநாதர் திட்டம்-1ன் மூலம் 23 கட்டிடங்களைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
இந்த திட்டம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
''விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துகிறேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தது அனைவருக்கும் தெரியும். கடுமையான விலைவாசி ஏற்றத்தால் உரங்கள் விலை உயர்ந்துவிட்ட நிலையில் எவ்வாறு விவசாயிகள் வருமானம் இரு மடங்காகும்.
பிரதமர் மோடியின் வாக்குறுதி தோல்வி அடைந்துவிட்டது. இந்தக் கேள்வியை மக்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் சரயு கால்வாய் திட்டம், காசி விஸ்வநாதர் கோயில் வளாகத் திட்டம் எனத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி தோல்விகளை மறைத்து வருகிறார்.
காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு எந்த அமைச்சரவையாவது அனுமதியளித்திருந்தால் அது சமாஜ்வாதி கட்சி அரசின் அமைச்சரவைதான். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. இந்த முறை ஆதாரங்களுடன்தான் பேசுவோம்''.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இதற்கிடையே அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “காசி விஸ்வநாதர் கோயில் வளாகத் திட்டத்தின் விவரம்: கோடிக்கணக்கான ரூபாய் சமாஜ்வாதி அரசில் ஒதுக்கப்பட்டது. வளாகத் திட்டத்துக்குத் தேவையானஇடங்களை சமாஜ்வாதி அரசுதான் கட்டிடங்கள் கட்டுவதற்கு கையகப்படுத்தியது.
கோயிலில் ஊழியர்களுக்கு ஊதியத்தை நாங்கள்தான் நிர்ணயம் செய்தோம். சமாஜ்வாதி அரசு வருணா நிதியில் மேற்கொண்ட தூய்மைப்பணி ஏன் நிறுத்தப்பட்டது, மெட்ரோ ரயில் பணி என்ன ஆனது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டுவரை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு உ.பி.யில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் ஒவ்வொரு நாளும் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறர்கள்.
கடந்த வாரம் பிரதமர் மோடி தொடங்கிவைத்த சரயு கால்வாய் திட்டம், பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் திட்டம் ஆகியவை சமாஜ்வாதி அரசில் தொடங்கப்பட்டவை என அகிலேஷ் யாதவ் உரிமை கொண்டாடினார். இதற்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.