இந்தியா

சபரிமலை கோயில் பிரசாதத்தை இனி அஞ்சல் மூலம் பெறலாம்

செய்திப்பிரிவு

கேரளாவில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் பெறலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியமும் அஞ்சல் துறையும் (கேரள வட்டம்) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு அஞ்சலகத்திலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் முன்பதிவு செய்யலாம். அவ்வாறு உரிய பணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

‘சுவாமி பிரசாதம்’ என அழைக்கப்படும் இதில், அரவனா, நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். பிரசாத பாக்கெட் 3 வகைகளில் கிடைக்கும்.

ஒரு அரவனா மற்றும் இதர பிரசாதங்கள் கொண்ட பாக்கெட் ரூ.450-க்கு கிடைக்கும். இதுபோல 4 அரவனா கொண்ட பாக்கெட் ரூ.830-க்கும் 10 அரவனா கொண்ட பாக்கெட் ரூ.1,510-க்கும் கிடைக்கும். ஒருவர் எத்தனை பிரசாதம் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து பெறலாம்.

குழு பரிந்துரை

கேரளா அரசின் உயர்நிலைக் குழு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நேரில் சென்று அங்குள்ள பல்வேறு டிஜிட்டல் நடைமுறைகளை பார்வையிட்டது. இதுபோன்ற டிஜிட்டல் சேவைகளை ஐயப்பன் கோயிலிலும் வழங்கலாம் என கேரள அரசுக்கு அக்குழு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT