வாழும் கலை அமைப்பு சார்பில், யமுனை நதிக்கரையில் உலக கலாச்சார விழா இன்று தொடங்க வுள்ளது. இந்த விழா ஏற்பாட்டின் போது சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டில் விழா தொடங்குவதற்கு முன்பாக ரூ. 5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் தவறு ஏதும் செய்ய வில்லை. நாங்கள் கறைபடியாதவர் கள், இனியும் அப்படித்தான். நாங்கள் சிறை செல்லத் தயார்; ஆனால், ஒரு பைசா கூட அபராதம் செலுத்த மாட்டோம். ஒரு மரத்தைக் கூட வெட்டவில்லை. கொஞ்சம் கிளைகளை நறுக்க மட்டுமே செய் திருக்கிறோம். நதிச் சமவெளியை சமப்படுத்தியிருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சிக்கு வருவார் என நம்புகிறேன். தற் போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் விரைவிலேயே உணர்ந்து கொள் வார்கள். இது கலாச்சார ஒலிம்பிக் போன்றது. 37 ஆயிரம் கலைஞர் கள் உலகம் முழுக்க இருந்து வந்து, ஒரே தளத்தில் இணைய உள்ளனர். மக்களை ஒருவரை யொருவர் நெருக்கமாக்கும் நிகழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
ரவிசங்கர் தனது ட்விட்டர் பதிவில், ‘தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தின் தீர்ப்பில் வாழும் கலை அமைப்புக்கு திருப்தி யில்லை. மேல்முறையீடு செய்யப் போகிறோம். கட்சிகள் இந்நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாள் கலாச்சார விழாவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டதால் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது. ஆனால், சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ. 5 கோடி செலுத்த உத்தரவிட்டது. டெல்லி மேம்பாட்டு ஆணையத்தையும் தீர்ப்பாயம் கடுமையாக விமர்சித்தது.
இதனிடையே நேற்று வரை அபராதம் செலுத்தப்படவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த தீர்ப்பாயம், “வெள்ளிக்கிழமை வரை அவர்களுக்கு அவகாசம் உள்ளது. நிபந்தனைகள் மீறப்பட்டால், அது எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படும். தேவைப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மறுப்பு
இதனிடையே நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
பாரதிய கிஸான் மஸ்தூர் சமிதி தொடுத்த இதுதொடர்பான மனு, தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஏற்பாடுகள் நீண்டகாலமாக நடந்து வருகின்றன. இப்போது ஏன் வருகிறீர்கள். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு ஏன் செல்லக்கூடாது. கடைசி நேரத்தில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது விளம்பரம் தேடவா” என கேள்வியெழுப்பிய நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரித்தனர்.