வங்கிகளைக் காப்பாற்ற முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும். அதனால்தான் வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ரூ.76 லட்சம் கோடி சேமிப்பு முழுமையாகக் காப்பீடு பெறுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.
வங்கியில் உள்ள வைப்புத்தொகை, சேமிப்புகளுக்கான காப்பீட்டு வங்கி திவால் ஆனாலோ அல்லது கொடுக்க முடியாமல் போனாலோ அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரைதான் காப்பீடு பெற முடியும். ஆனால், அதை ரூ.5 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இதன்படி சேமிப்புத்தொகைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். அதுவும் 90 நாட்களில் பெறலாம். இதற்கு முன் ரூ.1 லட்சம் காப்பீட்டைப் பெறவே 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அந்தத் தொகைக்கும் வட்டி கிடைக்காது. இந்தத் திட்டத்தால் 90 நாட்களில் பணத்துக்குக் காப்பீடு பெற முடியும்.
இதற்காக “முதலில் முதலீட்டாளர்கள்: உறுதியளிக்கப்பட்ட வைப்புத்தொகை காப்பீடு ரூ.5 லட்சம்” என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். புதுடெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒரு வங்கி பல பிரச்சினைகளைச் சந்தித்தது. மக்கள் சேமித்த பணத்தை எடுக்க முடியாமல் தவித்தார்கள். மக்களின் வலி இயல்புதான். அந்த நேரத்தில் மத்தியில் இருந்த ஆட்சியிடம், வங்கி வைப்புத்தொகை காப்பீட்டை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துங்கள் என்றேன். அப்போதுதான் பெரும்பாலான குடும்பங்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றேன்.
ஆனால், இப்போது இந்த திட்டத்தில் பணத்தை இழந்த மக்கள் 90 நாட்களில் இழந்த தொகையை காப்பீடாகப் பெற முடியும் என்பது சிறப்பானது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு ஏற்கெனவே பணமும் வழங்கப்பட்டுள்ளது. தேசத்தின் வளர்ச்சி, செழிப்புக்கு வங்கி முக்கியக் காரணம்.
வங்கிகளைக் காப்பாற்ற, நாம் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளையும், முதலீட்டாளர்களையும் பாதுகாத்துள்ளோம். இன்று ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதி கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் வங்கி வசதி இருக்கிறது. ஏறக்குறைய. 8.5 லட்சம் வங்கிகள் செயல்பாட்டில் உள்ளன.
வங்கிகள் வசதி படைத்தவர்களுக்குத்தான் என்ற சிந்தனை மாறியுள்ளது. இந்த தேசத்தின் வங்கி செயல்முறை ஜனநாயகமாக்கப்பட்டுள்ளது. வங்கி வைப்புத்தொகையான ரூ.76 லட்சம் கோடியும் இப்போது காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் உள்ள 98 சதவீத சேமிப்புத் தொகையும் காப்பீடு வசதி பெற்று முழுமை அடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இந்த வசதியில்லை.
வங்கிகளின் கட்டமைப்பு வசதிகளால் பெண்கள் அதிகமாகப் பயன்பெற்றுள்ளனர். தேசிய குடும்பநல சர்வேயின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 80 சதவீதப் பெண்களுக்கு வங்கி வசதி இருக்கிறது.
அனைத்து வங்கிகளும் கடந்த 75 ஆண்டுகள் செய்ததைவிட ஒன்றரை மடங்கு, 2 மடங்கு அதிகமாகச் செய்ய வேண்டும் என இலக்கு வைக்க வேண்டும். அதன்பின் கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.