சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் | கோப்புப்படம் 
இந்தியா

தேசத்தில் ஒற்றுமையை விரும்பாத கட்சி பாஜக; 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத் பவார் கூறியதை 2019-ல்தான் உணர்ந்தோம்: சஞ்சய் ராவத் பேச்சு

ஏஎன்ஐ

தேசத்தில் ஒற்றுமையை விரும்பாத கட்சி பாஜக என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத் பவார் கூறியதை 2019-ம் ஆண்டில்தான் உணர்ந்தோம் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் 81-வது பிறந்த நாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் மேடைகளில் அவர் பேசிய பேச்சுகளைப் புத்தகமாகத் தொகுத்து தேசியவாத காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

“துல்லியமான பேச்சு” என்ற தலைப்புள்ள இந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் பங்கேற்றுப் பேசியதாவது:

''தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் தொலைநோக்குச் சிந்தனையுடைவர். எதிர்காலத்தில் நடக்க இருப்பதைத் தனது அனுபவத்தால் கணித்துக் கூறுபவர். தேசத்தில் ஒற்றுமையை விரும்பாத கட்சி பாஜக என 25 ஆண்டுகளுக்கு முன்பே சரத் பவார் எச்சரித்தார். ஆனால், நாங்கள் கடந்த 2019-ம் ஆண்டுதான் உணர்ந்தோம். இதை உணர்வதற்கு சிவசேனாவுக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது.

பாஜகவின் கொள்கைகள் பிற்போக்குத்தனமானவை. நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லக்கூடியவை என்று கடந்த 1996-ம் ஆண்டே சரத் பவார் எச்சரித்தார். சரத் பவார் பேசிய பேச்சுகள் அடங்கிய இந்தப் புத்தகத்தை பிரதமர் மோடியிடம் கொடுத்து எவ்வாறு சுருக்கமாக, துல்லியமாகப் பேசுவது என்பன உள்ளிட்ட சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் என்ன பார்க்கிறோமென்றால், யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ, எதிர்க்கிறார்களோ அவர்கள் கட்டம் கட்டப்பட்டு அவர்கள் வாய் அடைக்கப்படுகிறது. கேள்வி கேட்பதற்கான உரிமையை மறுக்கும் இந்தப் போக்கு பெரும்பான்மைவாதத்தை வலுப்படுத்தும்''.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2014-19ஆம் ஆண்டுவரை பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, சிவசேனா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாதி எனும் கூட்டணி அமைத்துக் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இந்தக் கூட்டணி வெற்றிகரமாக 2 ஆண்டுகளை முடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT