ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாசுதீன் ஒவைசி | கோப்புப்படம் 
இந்தியா

மதச்சார்பின்மையால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கிடைத்ததா?- ஒவைசி எம்.பி. கேள்வி

ஏஎன்ஐ

அரசியல் மதச்சார்பின்மையால் முஸ்லிம் மக்களுக்கு என்ன பயன். அவர்களுக்குச் சமூகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லையே என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையின் புறநகரில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் நடந்த பேரணியில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கூட்டத்தில் பேசியதாவது:

''மதச்சார்பின்மை பற்றிப் பேசுகிறார்கள். அரசியல் மதச்சார்பின்மையை வைத்து என்ன செய்வது, அதனால் என்ன பயன்? அரசியல் மதச்சார்பின்மையால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்ததா. கிடைக்கவில்லையே?

எந்த முடிவு எடுக்கும் குழுவிலும் முஸ்லிம்களுக்கு உரிய உரிமை கிடைக்கவில்லையே. மதச்சார்பின்மை எனும் வார்த்தை முஸ்லிம்களைப் புண்படுத்திவிட்டது. அரசியலமைப்புச் சட்ட மதச்சார்பின்மையில்தான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மகாராஷ்டிராவில் 22 சதவீத முஸ்லிம்கள்தான் தொடக்கப் பள்ளிக்குப் போகிறார்கள். 4.9 சதவீதம் முஸ்லிம்கள்தான் பட்டம் பெறுகிறார்கள். மகாராஷ்டிராவில் 83 சதவீத முஸ்லிம்கள் நிலமற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளின் இதயமாக இருப்பது மராத்தியர்கள் மட்டும்தான். மாநிலத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடுகையில் மராத்தியர்கள் வாழ்க்கைத் தரம் அதிகமாக இருக்கிறது.

மும்பையில் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கவும், மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்கவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி இந்த மாத இறுதியில் வரும்போது தடை உத்தரவு அமலில் இருக்குமா. தடை உத்தரவுக்கு ஒமைக்ரான் காரணம் அல்ல, அதிகாரம்தான்.

ஏஐஎம்ஐஎம் கட்சி மதச்சார்பின்மையுள்ளவர்களின் வாக்குகளைப் பிரிக்கிறது என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூறுகின்றன. நான் கேட்கிறேன் சிவசேனா கட்சி மதச்சார்பின்மை கொண்டதா? சிவசேனா தொண்டர்கள் பாபர் மசூதியை இடித்தபோது பெருமை அடைந்தேன் என்று சட்டப்பேரவையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியபோது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏன் மவுனம் காத்தன?

பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததா, இல்லையே. யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லையே. நான் அரசியலமைப்பு மதச்சார்பின்மையில்தான் நம்பிக்கை கொள்கிறேன். அரசியல் மதச்சார்பின்மையில் நம்பிக்கையில்லை. நான் கேட்பது என்னவென்றால் முஸ்லிம்கள் அரசியல் மதச்சார்பின்மை எனும் தூண்டிலில் சிக்கிவிடக் கூடாது.

காங்கிரஸ், என்சிபி கட்சி ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தில் முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்புக்காக 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், கல்விக்கான இட ஒதுக்கீட்டை மட்டும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால், 2014 முதல் 2019-ம் ஆண்டுவரை பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டவே இல்லையே?''

இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT