முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளுக்கு சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறி, மலையாள இயக்குநர் அலி அக்பர்இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளுக்கு சிலர் சிரிப்புஎமோஜியை (ஸ்மைலி) பதிவு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இந்த எமோஜியை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மலையாள இயக்குநர் அலி அக்பர், நேற்று வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
நமது முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் மரணம் தொடர்பான செய்திகளுக்கு சிலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எமோஜியை பதிவு செய்ததைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அதிலும், இதுபோன்ற செயல்களுக்கு எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காதது அதை விட கொடுமையானதாக இருந்தது. எனவே இந்த தருணத்தில் இருந்து நான் இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுகிறேன். எனது பிறப்பில் இருந்து என்னுடன் இருந்து வந்த அடையாளத்தை இன்று தூக்கி எறிகிறேன். எனது மனைவியும் இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறுகிறார். எனது மகள்களை இந்த விவகாரத்தில் நான் நிர்பந்தப்படுத்த விரும்பவில்லை. அது அவர்களின் உரிமை சார்ந்தது. இவ்வாறு அந்த பதிவில் அவர் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
அலி அக்பர் இந்து மதத்திற்கு மாறியுள்ளதாகவும், தனது பெயரைராமசிம்மன் என மாற்றியுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பாஜகவில் கேரள மாநிலக் குழு உறுப்பினராக இருந்தஅலி அக்பர் கடந்த அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமாசெய்தார். கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ஏ.கே. நசீர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டித்து அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருந்தாலும், தான் பாஜகவில் அடிமட்ட தொண்டனாக நீடிப்பேன் என அவர் அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.