இந்தியா

பாலின சமத்துவம் பெற பொது சிவில் சட்டம் அவசியம்: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கருத்து

பிடிஐ

மதச் சட்டங்களில் இருந்து விடுபட வும் பாலின சமத்துவம் அடையவும் பொது சிவில் சட்டம் அவசியம் என்று வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் பங்கேற்ற தஸ்லிமா கூறியதாவது:

மத அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு நாடு, பழமைவாத நாடாகவே இருக்கும். ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றுடன் மதம் ஒத்துப்போகாது.

இந்து, முஸ்லிம் ஆகிய இரு மதங்களைச் சேர்ந்த பெண்களிட மும் பழமையான மதச் சட்டங்கள் அடிப்படையில் பாகுபாடு காட்டப் படுகிறது. தெற்கு ஆசியாவில் இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் மத அடிப்படையில் சட்டங்கள் உள்ளன. சட்டங்கள் மத அடிப்படையில் இருக்குமானால் பெண்களுக்கு சமத்துவம் இருக்காது. அனைத்து மதங்களும் பெண்களுக்கு எதிராக இருப்பதால், சமத்துவத்தின் அடிப்படையில் பொது சிவில் சட்டம் வேண்டும்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் தங்கள் தந்தையின் சொத்தில் சகோதர்களை போல சம உரிமை பெறுகின்றனர். திருமணத்திலும் அவர்களுக்கு சம உரிமை தரப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள இந்துப் பெண்கள் இன்றும் பழங்கால சாஸ்திர சம்பிரதாயங்களையே பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்கிறது.

இதுபோலவே இந்தியாவில் முஸ்லிம்கள் மதச் சட்டங்களை பின்பற்றுவதால் பெண்களுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது. இந்த சட்டம் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக உள்ளது.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் கூறினார்.

SCROLL FOR NEXT