தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 100 பேர் டெல்லியில் நேற்று தொடர் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
நதிகள் இணைப்பு, காவிரி பிரச்சினைக்கு தீர்வு, விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் முன் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த விவசாயிகள் கூறும்போது, “கடைசியாக சுமார் ஏழு மாதங் களுக்கு முன் டெல்லியில் போராடியபோது மத்திய நிதி யமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்தோம். ‘கவலைப்படாதீர் கள், நான் உதவுகிறேன்’ என்று அமைச்சர் உறுதி கூறினார். ஆனால் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை” என்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 விவசாயிகள் சாகும்வரை போராடுவது என நேற்று டெல்லி வந்துள்ளனர். இவர்களில் சுமார் 40 பேர் 60 முதல் 70 வயதுக் குட்பட்டவர்களாக உள்ளனர். முதல் நாளான நேற்று இவர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் தொடங்கினர். கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு இவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக தாங்கள் கைது செய்யப்பட்டால், சிறை செல்லவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ‘தி இந்து’விடம் கூறும்போது, நதி களை இணைப்பதாக மக்களவை தேர்தலின்போது மோடி வாக் குறுதி அளித்தார். ஆனால் இன்று வரை இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1 லட்சம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. நதிகள் இணைக்கப்பட்டால் இந்த நீர் சேமிக்கப்படும். காவிரி பிரச்சினையில் தீர்வை ஏற்படுத்த மேலாண்மை வாரியம் மற்றும் தீர்ப்பாயங்களை மத்திய அரசு அமைக்காமல் உள்ளது.
1970-ல் ஒரு மூட்டை நெல்லில் ஒரு பவுன் தங்கம் வாங்கிய விவசாயி இன்று 10 மூட்டை நெல்லை விற்றாலும் அதை வாங்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் ஆட்சியில் விவசாயிகளை அடிமை போலாக்கி விட்டன. தமிழக சட்டப்பேரவை தேர்தலாலும் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பகுதி (ஏப்ரல் 25) தொடங்கிய பிறகும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.