தனது மகன் வருண் சிங் மீண்டு வருவார் என வருணின் தந்தையும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் கே.பி.சிங் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் இருந்து கே.பி.சிங் ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் கூட இன்னும் சற்றும் வீரருக்கான உத்வேகம் குறையாமல் பேசுகிறார்.
கடந்த 8 ஆம் தேதி நீலிகிரி மாவட்ட குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர் பெங்களூருவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து தந்தை கே.பி.சிங் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
வருணின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. இப்போதைக்கு ஒன்றும் உறுதியாக சொல்ல இயலாது. ஆனால் வருணுக்கு தலைசிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். என் மகனுக்காக இந்த ஒட்டுமொத்த தேசமே பிரார்த்தனை செய்கின்றது. மக்களின் அன்பைக் கண்டு நான் உணர்ச்சி மிகுதியில் இருக்கிறேன். வருணைப் பற்றி நிறைய பேர் நலன் விசாரிக்கின்றனர். வருண் நலமடைய பிரார்த்தனை செய்கின்றனர். அவருக்கு இத்தகைய அன்பும் அரவணைப்பும் கிடைத்துள்ளது பெருமிதம் கொள்ளச் செய்கிறது. வருண் ஒரு ராணுவ வீரர். போராளி. அவர் வெற்றிகரமாக மீண்டு வருவார்.
இவ்வாறு வருண் சிங்கின் தந்தை கே.பி.சிங் தெரிவித்தார்.