இந்தியா

இந்தியா நிலைகுலைந்துவிடாது; இன்னும் வலுவானதாக, வளமானதாக வளரும்: பிரதமர் மோடி

ஏஎன்ஐ

இந்தியா எப்போதும் நிலைகுலைந்துவிடாது. நாம் இந்தியர்கள் ஒன்றுபட்டு, உள்நாட்டு சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் சேர்ந்தே சமாளிப்போம். நாம் தேசத்தை இன்னும் வலுவானதாகவும், இன்னும் வளமானதாகவும் உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய பிரதமர், "கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியை நாம் விபத்தில் இழந்துள்ளோம். இது ஒவ்வொரு தேசப்பற்றாளருக்கும் பெரும் பாதிப்பு. அவர் துணிச்சலானவர், கடினமாக உழைக்கக்கூடியவர். தேசம் ராணுவத்தில் தற்சார்புடையதாக மாற பாடுபட்டவர். அதற்கு இந்த தேசமே சாட்சி. ஒரு ராணுவ வீரர் உயிருடன் இருக்கும்போது மட்டுமே வீரராக இருப்பதில்லை. அவர் வாழ்ந்த காலம் தாண்டியும் போர்வீரராகவே இருக்கிறார். தேசத்தின் பெருமித அடையாளமாக ஒவ்வொரு நொடியும் இருப்பார்.

பிபின் ராவத், இனி இந்தியா புதிய தீர்மானங்களுடன் வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதைக் காண்பார். அவரது மறைவுக்காக இந்தியா துக்கம் அணுசரிக்கிறது. ஆனாலும் கூட இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது.

இந்தியா எப்போதும் நிலைகுலைந்துவிடாது. நாம் இந்தியர்கள் ஒன்றுபட்டு, உள்நாட்டு சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் சேர்ந்தே சமாளிப்போம். நாம் தேசத்தை இன்னும் வலுவானதாகவும், இன்னும் வளமானதாகவும் உருவாக்குவோம்.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ளா க்ரூப் கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற மருத்துவர்கள் போராடிக் கொண்டுள்ளனர். மா பாதேஸ்வரி அவரது உயிரைக் காப்பாற்ற நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன். இந்த தேசமே அவரது குடும்பத்திற்கு துணை நிற்கும்" என்றார்.

40 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறிய திட்டம்:

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 ல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக, இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.

2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, வெறும் நான்கு ஆண்டுகளிலேயே இத்திட்டம் முடிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் ஏற்பட்ட காலதாமதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதி விவசாயிகள், தற்போது மேம்படுத்தப்பட்ட பாசனத் திறன் மூலம் பெரிதும் பயனடைவார்கள். இத்திட்டத்தினால் அவர்கள் இப்போது பெரிய அளவில் பயிர்களை சாகுபடி செய்ய முடியும். மேலும், பிராந்தியத்தின் விவசாயத் திறனையும் அதிகரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT