உத்தராகண்டில் உள்ள தனது சொந்த கிராமத்தின் மீது மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் அதிக பிணைப்பு கொண்டிருந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் – மதுலிகா ராவத் தம்பதியருக்கு கிருத்திகா, தாரிணி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான கிருத்திகாவுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். இளைய மகள் தாரிணி, வழக்கறிஞராக பணிபுரிந்து கொண்டு தமது பெற்றோருடன் வசித்து வந்தார்.
முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு அவரது சொந்த ஊரான உத்தராகண்ட் மாநிலம் சாய்னா கிராமத்தின் மீது அதிக அளவு பற்று இருந்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாரத்துக்கு ஒரு முறையாவது அங்குள்ள தனது உறவினர்களிடம் பிபின் ராவத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவிடுவாராம். அதேபோல, சாய்னா கிராமத் தில் ஒரு வீடு கட்டிதான் குடி பெயரப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல, தனது மனைவியின் சொந்த ஊரான மத்திய பிரதேசத்தின் ஷாங்தோல் மாவட்டத்தின் மீதும் பிபின் ராவத் அளவு கடந்த பிரியத்தை வைத்திருந்ததாக கூறுகின்றனர். அந்த மாவட்டத்தில் ஒரு ராணுவப் பள்ளியை அமைக்கவும் அவர் திட்டமிட்டிருந்ததாக அவர்களின் உறவினர்கள் கூறினர்.
இந்நிலையில், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் அஸ்திகளை ஹரித்துவாருக்கு எடுத்துச் சென்று கங்கை நதியில் கரைக்க போவதாக அவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.