இந்தியா

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை: மத்திய அரசு மனு மீது உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

பிடிஐ

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு நேற்று தடை விதித்தது.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து முதல்வராக இருந்த ஹரிஷ் ராவத், நைனிடாலில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி யு.சி.தயானி, சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்கும் வகையில் 31-ம் தேதி (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரும் பங்கேற்கலாம் என்றும் இவர்களது வாக்குகள் தனியாக வைக்கப்பட்டு அதை ஏற்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

“அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி உத்தராகண்ட் அரசை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு முடக்குவது சரியல்ல. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே சரியான வழி” என நீதிபதி கூறியிருந்தார். எனினும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு தடை விதிக்கவில்லை.

இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உயர் நீதி மன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் நீதிபதி வி.கே.பிஷ்ட் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு உடனடியாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, “உத்தரா கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவை யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஏப்ரல் 7-ம் தேதி வரை நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதுகுறித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் குழுவில் இடம்பெற்றுள்ள நலின் கோலி கூறும்போது, “குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத் தியதற்கான காரணத்தைத் தெரி விக்குமாறு நீதிமன்றம் கேட்டுள்ளது. வரும் 4-ம் தேதி இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும். அடுத்த நாள் காங்கிரஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.

இதற்கிடையே, தங்களை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அதிருப்தி (காங்கிரஸ்) எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நீதிபதி யு.சி.தயானி நேற்று நிறுத்தி வைத்தார். ஏப்ரல் 1-ல் விசாரணை நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட உடன், சட்டப் பேரவை சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் 9 அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்டில் ஆளும் காங் கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சி யைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதை யடுத்து, பாஜக எம்எல்ஏக்களும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்எல்க் களும் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து, முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு பெரும் பான்மையை இழந்துவிட்டதாகவும், அந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் மார்ச் 28-க்குள் பெரும்பான்மையை நிரூ பிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, ஹரிஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினார். இதனால் பெரும்பான்மையை நிருபிப்பதற் கான கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாகவே (27-ம் தேதி) அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT