கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் கழிவுகள் அகற்றப்படுவது குறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
திமுக எம்.பி., டி.எம்.கதிர் ஆனந்த் எழுப்பிய இக்கேள்விக்கு மத்திய அணுசக்தித் துறையின் இணை அமைச்சரான ஜிதேந்தர்சிங் பதிலளித்தார்.
அந்த பதில் பின்வருமாறு:
அணு எரிபொருளுக்கு இந்தியா மூடிய சுழற்சியை பின்பற்றுகிறது. அணுமின் நிலையங்களில் இருந்து செலவழிக்கப்பட்ட எரிபொருள் மறுசெயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இது பயனுள்ள ரேடியோ ஐசோடோப்புகளை பிரிக்க உதவுகிறது. இத்துடன், ஒட்டுமொத்த அணுக்கழிவு அளவையும் குறைக்கிறது.
கதிரியக்கக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் குறுகிய/நீண்ட கால சேமிப்பிற்கான திட்டங்களை DAE உருவாக்கியுள்ளது. அணுக்கழிவு மேலாண்மை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன.
கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் உட்பட அனைத்து அணுமின் நிலையங்களின் வடிவமைப்பும், கதிர்வீச்சு அளவாக AERB நிர்ணயித்த வரம்பிற்குள் இருக்கும் வகையில் உள்ளது.
அணுமின் நிலைய எல்லையில் உள்ள கதிரியக்க அளவு, அந்த இடத்தைச் சுற்றியுள்ள காற்று, நீர், தாவரங்கள், பயிர்கள், கடல் உணவுகள் போன்ற சுற்றுச்சூழல் அளவீடுகளை கண்காணிப்பதன் மூலம் பெறப்பட்ட அளவு, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட மிகக் குறைவாகும்.
இதனால், அணுமின் நிலையங்களின் செயல்பாட்டின் போது உருவாகும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவிதமான பாதகமான பாதிப்பும் இல்லை. மேலும், மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் (நிலம், நீர், காற்று) தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.