டெல்லியில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

முப்படைத் தளபதி இறுதி ஊர்வலம்: டெல்லியில் 7.3 கிலோ மீட்டர் தொலைவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீரவணக்கம்

செய்திப்பிரிவு

முப்படைத் தலைமைத் தளபதியின் இறுதி ஊர்வலத்தில் வீரவணக்கத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.

இறுதிச் சடங்குக்கான ஆயத்தப் பணிகள் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள பிரார் ஸ்கொயர் மைதானத்தில் அமைந்துள்ள மயானத்தில் காலையிலிருந்தே நடைபெற்று வந்தன.

விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் சக ராணுவ அதிகாரிகளான பிரிகேடியர்களுக்கு இன்று காலை பிரார் ஸ்கொயர் மைதானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அந்த இறுதிச் சடங்கில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியின் இல்லத்திலிருந்து கண்டோன்மென்ட் வரை உள்ள தூரம் 7.3 கிலோ மீட்டர். இங்கு டெல்லி போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் காலையிலிருந்து கடும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்விதப் போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் இந்தச் சாலை அமைந்துள்ளது. ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய வீரர்கள் சாலை நெடுகிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முப்படைத் தலைமைத் தளபதியின் இறுதி ஊர்வலத்தில் சாலை நெடுகிலும் வீரவணக்கத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT