குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் இறப்பால் அவரது சொந்த ஊரான உத்தபிரதேசத்தின் ஆக்ரா நகர் சோகத்தில் மூழ்கியுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இவர்களில் விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகானும் ஒருவர். உ.பி.யின் ஆக்ரா நகரை சேர்ந்த இவர், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முந்தைய நாள் இரவு தனது தாயாருடன் போனில் பேசியுள்ளார்.
இதுகுறித்து விங் கமாண்டர் சவுகானின் தாயான சுஷிலா சவுகான் கூறும்போது, “எனது மகன் ராணுவத்தில் சேர்ந்தது முதல் எங்கிருந்தாலும் தினமும் ஒரு முறையானது என்னிடம் பேசி விடுவான். அதேபோல், விபத்தில் சிக்குவதற்கு முந்தைய நாள் இரவும் என்னிடம் நலம் விசாரித்து பேசியிருந்தான். ஆனால், மறுநாள் காலை தொலைக்காட்சிகளில் விபத்து குறித்த செய்திகளை பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.
ஆக்ராவைச் சேர்ந்த சுரேந்தர் சிங் சவுகான் மற்றும் சுஷிலா சவுகான் தம்பதியின் கடைசி மகனான பிருத்வி சிங்குக்கு 4 மூத்த சகோதரிகள் உள்ளனர். பிருத்விக்கு 2007-ல் திருமணமாகி 12 வயது மகளும், 9 வயதுமகனும் உள்ளனர். தனது பள்ளிக்கல்வியை மத்திய பிரதேசத்தின் ரீவாவிலுள்ள ராணுவப்பள்ளியில் பயின்ற பிருத்வி, 2000-ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் இணைந்தார்.
பிருத்வியின் குடும்பம் கோயம்புத்தூரின் சூலூரில் வசிக்கிறது. இவரது மனைவி காமினி சவுகான் தனது 2 குழந்தைகளுடன் சூலூரில் இருக்கிறார். தன் கணவரின் உடலுடன் ஆக்ராவில் நடைபெறும் இறுதிச் சடங்கிற்கு அவர் வர உள்ளார்.