ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேருடன் உயிரிழந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் நீலகிரியில் உள்ள குன்னூர் மலைப்பகுதியில் புதன்கிழமை நண்பகல் ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மரத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கி தீக்கிரையானது.
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றம் 11 பேர் உயிரிழந்தது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து சென்னை ரெஜிமென்ட் மையத்துக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
நாளை டெல்லியில் ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உயிரிழந்த மற்றவர்களுக்கும் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
காஷ்மீரில், ஜம்மு நகரத்தின் பள்ளி மாணவர்கள் இன்று ஜெனரல் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத்தின் படங்களை ஏந்தியும் மெழுகு வர்த்தி ஏற்றி மாணவர்கள் சோகமே உருவாக காட்சியளித்தனர்.
ஏஎன்ஐயிடம் பேசிய பள்ளி ஊழியர் ஒருவர் ஏஎன்ஐயிடம் கூறியதாவது: ''ஜெனரல் ராவத் தன்னை முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாகக் காட்டிக் கொண்டார். சிப்பாயாக மட்டுமின்றி உன்னத மனிதராக அவர் விளங்கினார். அவர் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் இந்தியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.
அவர் இந்திய எதிர்ப்புப் படைகளுக்கு முன்னால் அவர் சுவர் போல் நின்றார். இது ஒரு சோகமான இழப்பு, அதைத் தாங்குவது கடினம். முழு நாடும் அவரது இழப்பில் துக்கத்தில் உள்ளது. விபத்தில் உயிர் பிழைத்த ராணுவ வீரருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
மற்றொரு பணியாளரான பராஸ், ''தேசம் ஒரு பெரிய இழப்பை சந்தித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது பாதுகாப்புப் படைகளை ஒருங்கிணைத்த ஒரு பெரிய தொலைநோக்கு பார்வையாளர் ஒருவரை நாம் இழந்ததால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். இதிலிருந்து நமத்தை தேசத்தைக் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும். இந்த சோகம் அனைவரையும் ஒன்று சேர்க்கும் என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியும்'' என்றார்.
பள்ளி மாணவி பூமி தாக்கூர் தலைமைத் தளபதி இழப்பிற்கு இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து ஏஎன்ஐயிடம் மாணவி கூறியுள்ளதாவது:
''இது பாதுகாப்புப் படைகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சோகமான செய்தி. ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி 11 அதிகாரிகளுடன் காலமானார் என்ற செய்தியைக் கேட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த மாபெரும் சோகம் திடீரென்று நடந்தது. 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் அவர் நிறைய பங்களித்தார். இது பாதுகாப்புப் படைகளுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் சோகமான செய்தி" என்றார்.