இந்தியா

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் தகவல்

செய்திப்பிரிவு

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக நேற்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன.

அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நஞ்சப்பசத்திரம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் பயணித்த தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவையில் அஞ்சலி

இந்தநிலையில் பிபின் ராவத் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அவர் விவரித்தார். அப்போது ராஜ்நாத் பேசியதாவது:

கோவை சூலூரில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பியுள்ளனர். வெலிங்கடனில் தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னதாக விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடப்பற்கு முன்னர் கட்டுப்பாட்டை இழந்த உடன் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளில் ஒருவரான வருண் சிங் செயற்கை சுவாச உதவியுடன், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான விசாரணை துவங்கியுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து முப்படை விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடைபெறும்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT