நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி எனும் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியானதாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட்களில், இன்று நண்பகலில் IAF Mi 17 V5 ரக ஹெலிகாப்டர் முப்படைகளின் தளபதி உள்ளிட்ட 9 பயணிகளுடன் புறப்பட்டது. ஹெலிகாப்டரை இயக்கும் குழுவில் 4 பேர் இருந்தனர். மொத்தம் 14 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தமிழகத்தின் குன்னூரில் இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கிறோம்.
இந்த விபத்தில் காயமடைந்த கேப்டன் வருண் சிங் சீனியர் கமாண்டர், காயங்களுடன் வெல்லிங்கடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபின் ராவத், இந்திய ராணுவத்தின் முதல் முப்படைத் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.