இந்தியா

சேலத்தில் மீண்டும் விமானப் போக்குவரத்து: மக்களவையில் பார்த்திபன்  கோரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

சேலத்தில் இயங்கிய விமானநிலையம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் போக்குவரத்தை மீண்டும் துவக்க அத்தொகுதி திமுக எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன் மக்களவையில் கோரினார்.

இது குறித்து இன்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் பேசியதாவது: தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக சேலம் விளங்குகிறது.

சேலம் எஃகு ஆலை, கெம்பிளாஸ்ட், மால்கோ, சிஸ்கோல், ஜவ்வரிசி, ஜவுளி, வாகனம் மற்றும் கோழிப்பண்ணை போன்ற பல தொழில்களும் இந்த நகரத்தில் உள்ளன.

ட்ரூ ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் கடந்த 2018 மார்ச் 25 இல் சிவில் ஏவியேஷன் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

சேலம் விமானநிலையம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிராந்திய இணைப்பு சேவை விமான நிலையமாகும். சேலம் விமானநிலையம் தமிழ்நாட்டின் ஆறாவதாக அமைந்த விமான நிலையம் ஆகும்.

இந்த விமான நிலையம் ஏப்ரல், 1993 இல் 136 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இதற்கான நிலம் உள்ளூர் மக்கள், வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஓடுபாதை நீளத்தின் அடிப்படையில் இது இந்தியாவின் ஐம்பதாவது பெரிய விமான நிலையமாகும். சேலம்-சென்னை-சேலத்தில் இருந்து தினசரி அடிப்படையில் இயங்கும் ட்ரூஜெட் என்ற ஒரே பிராந்திய விமான நிறுவனம்.

இது தற்போது அதன் விமான சேவைக்கான உரிமத்தை இழந்து வருகிறது. இதனால், சேலத்தில் அதன் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான சேவைகள் கிடைக்காததால், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சாலைவழியாக செல்ல வேண்டியிருப்பதால் தங்கள் நேரம் வீணாவதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

பிரதமரின் கனவுத் திட்டமான உடான் திட்டம் சேலம் மக்களுக்கு பலன் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். எனவே, சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான இணைப்பைத் தொடங்க வேண்டும்.

சென்னை, பெங்களூரு உள்பட அனைத்துத நகரங்களுக்கும் தினசரி போக்குவரத்து சேவைகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அத்துறையின் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர்லைன்ஸ் மற்றும் அலையன்ஸ் ஏர் ஆகிய நிறுவனங்கள், சேலத்தில் இருந்து தங்கள் விமானங்களை இயக்க ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளன.

ஆனால் அது நிறைவேறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும் வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT