நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை ராணுவ கமாண்டோ வீரர்கள் மறைக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
நாகாலாந்தின் மோன் மாவட்டம் திரு-ஒடிங் சாலையில் சென்ற ஒரு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் என நினைத்து ராணுவ கமாண்டோ வீரர்கள் கடந்த 4-ம் தேதி மாலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவத்தின் 21-வது சிறப்பு படைப் பிரிவு மீது மாநில போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாநில டிஜிபி ஜான் லாங்குமார் மாநில அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை முடிந்து வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதுராணுவ வீரர்கள் அந்த வாகனத்தை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள்தீவிரவாதிகளா, பொதுமக்களா என்பது குறித்து எவ்வித விசாரணையும் நடத்தாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் வீடு திரும்பாததால் ஒடிங் கிராம மக்கள் உறவினர்களை தேடி அலைந்துள்ளனர். சாலையில் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்த மக்கள், அதன் அருகே சென்று பார்த்துள்ளனர். அந்தவாகனம் தார்பாலினால் மூடப்பட்டிருந்தது. வாகனம் மற்றும் சாலையில் சிதறியிருந்த ரத்தம் மண் கொட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் மற்றொரு வாகனத்தில் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்த கிராம மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் உயிரிழந்ததை ராணுவ வீரர்கள் மறைக்க முயற்சி செய்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெறக் கோரி பல்வேறுஅமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஹார்ன்பில் திருவிழா ரத்து
நாகாலாந்தில் மாநில சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் பாரம்பரிய ஹார்ன்பில் திருவிழா நடத்தப்படுகிறது. 10 நாள் நடைபெறும் இவ்விழா தலைநகர் கொஹிமா அருகில் உள்ள கிசாமா கிராமத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம்முதல்வர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹார்ன்பில் திருவிழாவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.