நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவில், 66 வயதான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருந்து நிறுவன ஊழியர் மற்றும் 46 வயதான பெங்களூரு மருத்துவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கடந்த 2-ம் தேதி கண்டறியப்பட்டது. ஆனால், பெங்களூருவில் இருந்து தப்பியோடிய தென்னாப்பிரிக்க நோயாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவர் பொம்மனஹள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில்இருந்த மனைவி, இரு மகள்கள் உட்பட 5 பேருக்கு கரோனாதொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து 5 பேரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இதில் அவரது 5 வயது மகள் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததால் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 46 வயதான மருத்துவருக்கு பரிசோதனை செய்ததில் அவர் ஒமைக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்தது தெரியவந்தது. அதேவேளையில் அவருக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர்.
2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அந்த மருத்துவருக்கு 2-வது முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.