நான் பாஜகவில் சேராததாலேயே என் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு திஹார் சிறையில் அடைத்தனர் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமார் பெலகாவியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. முதல்வர் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை நீக்கப்பட போவதாக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பாவே தெரிவித்துள்ளார். அமைச்சர் முருகேஷ் நிரானி விரைவில் முதல்வராக பதவியேற்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
பாஜக அரசுக்கு எதிராகவும் பசவராஜ் பொம்மைக்கு எதிராகவும் பாஜக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. என்னைப் பொறுத்தவரை பாஜக மேலிடம் அவரைமுதல்வர் பதவியில் இருந்து நீக்கியது பெரிய தவறாகும். அவரது துக்கமும், கோபமும் பாஜக ஆட்சிக்கு சிக்கலாக மாறியுள்ளது.
என்னையும் மிரட்டினர்
பாஜக மேலிடத் தலைவர்கள் மிரட்டியதாலேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். என்னையும் பல முறை மிரட்டியுள்ளனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் சோதனைகளை நடத்தி தொல்லைக் கொடுத்தனர். பாஜகவில் சேராவிட்டால் திஹார் சிறைக்கு செல்ல வேண்டிவரும் என பகிரங்கமாகவே எச்சரித்தனர். அவர்களின் மிரட்டலை பொருட்படுத்தாததாலேயேஎன்னை சிறையில் அடைத்தனர்.தற்போதும் வழக்குகளைப் போட்டு மறைமுகமாக மிரட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.