இந்தியா

கண்ணய்யா குமார் ஜாமீன் ரத்து மனு மார்ச் 23-ல் விசாரணை

பிடிஐ

ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மார்ச் 23-ல் விசாரிக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினத்தை அனுசரித்து, அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதாக தேச விரோதச் சட்டத்தின் கீழ், கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில், பிரசாந்த் குமார் உமாராவ் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை வரும் 23-ம் தேதி மனுவை விசாரிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லுத்ரா, "கண்ணய்யா ஜாமீன் ரத்து செய்யக் கோரும் மனுவை அவசரம் கருதி வரும் திங்கள் கிழமையே விசாரிக்க வேண்டும். கண்ணய்யா குமார் ஜாமீனில் வெளியான பின்னர் ஆற்றிய உரை, தேச விரோதமானது. கண்ணய்யா குமார் ஜாமீன் விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது உரையால் தேசத்தின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், வரும் 23-ம் தேதியன்று மனு மீது விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துவிட்டது.

SCROLL FOR NEXT