இந்தியா

தேனி மாவட்ட திராட்சை சாகுபடியை வணிகரீதியாகப் பெருக்க வேண்டும்: மக்களவையில் ரவீந்திரநாத் கோரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

தேனி மாவட்டத்தில் திராட்சை சாகுபடியை வணிகரீதியாகப் பெருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை அதன் மக்களவை தொகுதியின் அதிமுக எம்.பியான ப.ரவீந்திரநாத் இன்று நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அதிமுகவின் மக்களவை எம்.பியான ரவீந்திரநாத் பேசியதாவது: தமிழ்நாட்டின் திராட்சை பயிரிடப்படுகின்ற 2800 ஹெக்டேர் நிலத்தில் 2184 ஹெக்டேர் எனது தேனி மக்களவை தொகுதியில் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டின் திராட்சை சாகுபடியில் தேனி மாவட்டம் மிகப்பெரும் பங்கை கொண்டுள்ளது. எனவே, திராட்சை உற்பத்தியில் தேனி மாவட்டத்தை வணிகரீதியாக சாகுபடி பரப்பை விரிவுபடுத்த வேண்டும்.

திராட்சை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அதிகரிப்பதுடன் திராட்சை சாகுபடியில் அறிவியல் முறைகளை பயன்படுத்தி, விவசாயிகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

எனவே, எனது தேனி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆனைமலையான்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஏஆர்) கீழ் வழக்கமான மையமாக சேர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த திராட்சை ஆராய்ச்சி நிலையத்திற்கு தேவையான நிதி, ஆராய்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தங்கள் மூலம் நான் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT