இந்தியா

அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும் வாய்ப்பு: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவு பெறுகிறது?

ஆர்.ஷபிமுன்னா

மத்திய அரசு அமலாக்கிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களால், விவசாயிகள் டெல்லியில் போராடத் துவங்கினர். சுமார் 15 மாதங்களாக தொடரும் இவர்களது போராட்டம் தற்போது முடிவிற்கு வரும் சூழல் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு அச்சட்டங்களால் அதிகம் பாதிப்படைவது பஞ்சாபிகள் என்பது காரணமாயிற்று.

அடுத்த நிலை பாதிப்பில் ஹரியாணாவின் விவசாயிகளும் இருந்தமையால் அவர்களும் பஞ்சாப் விவசாயிகளுடன் கைகோர்க்கத் தயாராகினர். இதனால், டெல்லியின் எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் துவங்கியது.

இவர்களுடன் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட் உள்ளிட்ட விவசாயிகளும் இணைய அது தேசிய அளவில் வெடித்தது. இது, கடும் குளிருக்கும், கோடையின் கொடுமையான வெப்பத்திற்கும் கூட விவசாயிகள் சளைக்கவில்லை.

இதன் பாதிப்பில் சுமார் 700 விவசாயிகள் பரிதாபமாகப் பலியானதாகப் புள்ளி விவரங்கள் வெளியாயின. இவர்களது தியாகத்தின் பலனாக கடந்த வாரம் தம் அரசின் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதனால், வெற்றிக் களிப்பில் திளைத்தாலும் போராடும் விவசாயிகள் மிக ஆழமாக யோசித்து முடிவு எடுக்கத் துவங்கினார். மத்திய அரசின் அறிவிப்பிற்கு அடுத்து வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக இருந்தது.

இதே சூழலுக்கான அறுவடையை தாமும் பெற முடிவு செய்தவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதன் பலனாக, அதற்கும் வெற்றி கிடைக்கும் வகையில் மத்திய அரசு தனது முடிவுகளை மாற்றும் வாய்ப்புகள் உருவாகி விட்டன.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையே முக்கிய மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுள்ளது. மீண்டும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரான மத்திய அரசு அத்தகவலை விவசாயிகளிடம் தெரிவித்தது.

இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போராட்டக்குழுவினரிடம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது. அவரிடம் தங்கள் மீதம் உள்ள கோரிக்கைகளை விவசாயிகள் தெளிவாக விளக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்திருந்தனர்.

இவை எதுவும் முன்பு போல் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க மத்திய அரசு தயாராகி விட்டதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்து தமிழ் இணையத்திடம், விவசாயிகள் குழுவினர் தரப்பில் தெரிவிக்கையில் ‘‘குறிப்பாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கவும் மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்காக ஐவர் கொண்ட ஒரு குழு அமைக்க மத்திய அரசு முன்வரும் என நம்புகிறோம்’’ என தெரிவித்துள்ளது.

இக்குழு, போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதன் மீது முடிவு எடுக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இப்போராட்டத்தில் விவசாயிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறவும் மத்திய அரசு தயாராகி விட்டது.

தம் வசம் உள்ள டெல்லி உள்துறையை தவிர்த்து மற்ற மாநில அரசுகளுக்கு இதன் மீதான பரிந்துரைகள் ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டன. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்களால் விவசாயிகள் மீது தொடுக்க இடப்பட்ட சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

இவற்றை குறிப்பிட்டு மத்திய அரசின் ஒரு மாதிரிக் கடிதம் இன்று காலை போராடும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகள் நாளை அல்லது மிகவிரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவு எடுக்க உள்ளது.

இதில் தம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி விட்டதாகக் கூறி ஒரு வெற்றி ஊர்வலமும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, எந்நேரமும் விவசாயிகள் போராட்டம் முடிவிற்கு வரும் அதிகாரபூர்வ செய்தி வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

SCROLL FOR NEXT