நாகாலாந்தில் ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 4), நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் பொதுமக்கள் 6 பலியாகினர். இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் ஆவார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டமக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என உள்துறை அமித்ஷா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்துறை அமைச்சகம் சரியாக என்ன செய்துள்ளது எனக் கேட்டார்.
இதில் பலியான பொதுமக்களின் இறுதிச்சடங்கு மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங்கில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பிறகு அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசுசார்பில் ரூ.11 லட்சமும், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.
நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசினேன், அவர் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமான பிரச்சினையாக எடுத்துக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி செய்துள்ளோம். நாகாலாந்தில் இருந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று நான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன், ஏனெனில் இந்தச் சட்டம் நாட்டின் பிம்பத்தில் ஒரு கரும்புள்ளியாக உள்ளது''
இவ்வாறு ரியோ தெரிவித்தார்..
ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA), 1958 என்பது பொது ஒழுங்கைப் பராமரிக்க இந்திய ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.